பிசிசிஐ, ஐசிசி உடன் ஸ்பான்சர்ஷிப்களை, பைஜூஸ் இனி புதுப்பிக்காது- சிஇஓ ரவீந்திரன்
பிசிசிஐ, ஐசிசி மற்றும் ஃபிஃபாவுடனான ஸ்பான்சர்ஷிப்களை பைஜூஸ் இனி புதுப்பிக்காது என சிஇஓ ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரபல ஆன்லைன் கற்றல் தளமான பைஜூஸ், அதன் பிசிசிஐ, ஐசிசி மற்றும் ஃபிஃபாவுடனான வர்த்தக ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என, பைஜூஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரன் தெரிவித்துள்ளார். நிறுவனம், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் லாபத்தை அடைவதற்காக சில செலவுகளைக் குறைக்க விரும்புகிறது.
ஃபிஃபா ஸ்பான்சர்ஷிப்பிற்கு $30-40 மில்லியன் மற்றும் பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப்பிற்கு $55 மில்லியன் என பைஜூஸ் கடந்த நிதியாண்டில் செலவழித்துள்ளதால், பைஜூஸின் இந்த நடவடிக்கை அந்த நிறுவனத்திற்கு பல மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பைஜூஸ் தற்போது தேவையானபிராண்ட் மதிப்பை அடைந்துள்ளதாக நாங்கள் நினைக்கிறோம், இதனால் இனி நிறுவனத்தின் பிராண்ட்டிற்கான விளம்பர செலவைக் குறைப்பதை பைஜூஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது என சிஇஓ ரவீந்திரன் மேலும் கூறினார்.