பெரூ அணியை 1-0 என்று வீழ்த்திய பிரேசில் அணி..!-கோப்பா அமெரிக்கா இறுதிக்குள் நுழையும் பிரேசில்..!
கோப்பா அமெரிக்கா 2021 அரையிறுதி போட்டியில் பெரூ அணியை 1-0 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
கோப்பா அமெரிக்கா 2021 தென் அமெரிக்க கால்பந்து போட்டி முதல் அரையிறுதியில் பெரூ அணியை 1-0 என்று வென்று பிரேசில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் கோல்களை பெரூ கோல் கீப்பர் நல்ல முறையில் தடுத்து வந்தார். பிரேசில் அணியின் வீரர்கள் காஸ்மிரோ, நெய்மார், ரிகார்லிசன் ஆகியோர் தொடக்கத்தில் அடித்த கோலை பெரூ அணியின் கோல் கீப்பர் பெட்ரோ காலிஸ் அருமையாக தடுத்து நிறுத்தினார்.
பின்னர் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் பெரூ அணியின் 3 வீரர்களுக்கு ஆட்டம் காட்ட தொடங்கினார். இதனை பார்த்து கொண்டிருந்த லூகாச் பக்கெட்டாவிடம் நெய்மார் சரியாக ஆட்டத்தின் 37 ஆவது நிமிடத்தில் பந்தை தள்ளிவிட, பக்கெட்டா கோல் அடித்தார். இதனால் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கோலை அடித்து முன்னேறியது. இராண்டாவது பாதியில் பெரூ அணிக்கு கிடைத்த நல்ல கோல் வாய்ப்பை பிரேசில் அணியின் கோல் கீப்பர் எடர்சன் தடுத்துவிட்டார்.
இதனால் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேலும், இரண்டாவது அரையிறுதி போட்டியானது நாளை அர்ஜென்டினா-கொலம்பியா இடையே நடைபெற இருக்கிறது. பிரேசில் இதுவரை 9 கோப்பா அமெரிக்கா போட்டிகளை வென்றுள்ளதால், இறுதிப்போட்டியில் வெற்றியடைந்தால் 10 ஆவது முறையாக சாம்பியன் வென்ற சாதனையை அடையும்.