பாக்ஸிங் டே டெஸ்ட்.. 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி..! ரஹானேவிற்கு ஆட்டநாயகன் விருது ..!
கடந்த 26-ஆம் தேதி இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரஹானே, ஜடேஜா சிறப்பாக விளையாடி ரஹானே சதமும், ஜடேஜா அரைசதமும் விளாசினார்.
இறுதியாக இந்திய அணி 115.1 ஓவரில் 326 ரன்கள் எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை நேற்று தொடங்கியது. தொடக்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே ஜோ பர்ன்ஸ் 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 28, டிராவிஸ் 17 , ஸ்மித் 8 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால், நேற்றைய 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 66 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து, 3 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் மத்தேயு வேட் 40 ரன்னில் விக்கெட்டை இழக்க, மத்தியில் இறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்தார். பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக ஆஸ்திரேலிய அணி 103.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் முகமது சிராஜ் 3, ரவீந்திர ஜடேஜா , பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்நிலையில், இந்திய அணி 70 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடங்க வீரர்களாக இறங்கிய மாயங்க் அகர்வால், சுப்மான் கில் இறங்கினர். மாயங்க் அகர்வால் இறங்கிய வேகத்தில் 5 ரன் எடுத்து வீக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய புஜாராவும் வந்த வேகத்தில் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, ரஹானே மற்றும் சுப்மான் கில் இருவரும் கூட்டணி அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியாக இந்திய அணி 15.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 70 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றனர். கடைசிவரை களத்தில் ரஹானே 27* , சுப்மான் கில் 35* ரன்களுடன் இருந்தனர். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த இரு அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 07-ம் தேதி நடைபெறவுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விலையாடிய கேப்டன் ரஹானேவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.