நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்கதேச அணி ஆறுதல் வெற்றி..!
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று ‘2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 98 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லதம் 21 ரன்களும், யங் 26 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேச அணி சார்பில் சௌமியா சர்க்கார், சாரி ஃபுல் இஸ்லாம், ஹாசன் ஷகிப், தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 99 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 15.1 ஓவரில் ஒரு விக்கெட் பறிகொடுத்து 99 ரன்கள் இலக்கை எட்டி கடைசி ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.