“மோசமான பீல்டிங்”..8 கேட்சுகளை விட்ட பாகிஸ்தான்..விமர்சித்த முன்னாள் கேப்டன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 கேட்சுகளை பாகிஸ்தான் அணி தவறவிட்டது மிகவும் மோசமான பீல்டிங் என முன்னாள் கேப்டன் சனா மிர் விமர்சித்து பேசியுள்ளார்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது . இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு 111 ரன்கள் எடுத்தால் வெற்றி எனப் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்கத்திலிருந்தே தடுமாறி விளையாடி வந்த பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்களில் 56 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில், பேட்டிங்கில் மட்டும் சொதப்பாமல் பீல்டிங்கிலும் பாகிஸ்தான் அணி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூட சொல்லாம்.
ஏனென்றால், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது கிட்டத்தட்ட 8 கேட்சிகளை பாகிஸ்தான் அணி தவறவிட்டது. இந்த போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும். இப்படியான முக்கியமான போட்டிகளில் இப்படி கேட்சுகளை தவறவிட்டது பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
தவறவிட்ட கேட்சுகளை பிடித்திருந்தால் கண்டிப்பாக இன்னும் குறைவான ரன்களில் நியூசிலாந்து அணியைப் பாகிஸ்தான் அணி சுருட்டி இருக்கலாம், ஆனால், அருமையான வாய்ப்பை பாகிஸ்தான் தவறவிட்டு இருக்கிறது. பாகிஸ்தான் அணி 4.2, 5.2, 7.3, 15.5, மற்றும் 17.2, 19.1, 19.3, 19.5 ஆகிய ஓவர்களில் கேட்சுகளை தவறவிட்டது. இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா 4 கேட்சுகளை கைவிட்டார்.
பந்துகளைப் பறந்து பறந்து பிடிக்கக் கூடிய பாகிஸ்தான் அணி பல கேட்சுகளை தவறவிட்டதைப் பார்த்துவிட்டு முன்னாள் கேப்டன் சனா மிர் அதிர்ச்சியடைந்தார். வர்ணனையிலிருந்த சனா மிர் தன்னுடைய அணியின் பீல்டிங் குறித்து விமர்சித்துப் பேசினார். ” கடந்த 15 வருடங்கள் விளையாடியதில் நான் இப்படி மோசமான பீல்டிக்கை பார்த்ததில்லை. இப்படியான கேட்சுகளை பாகிஸ்தான் அணி தவறவிட்டது வேதனையாக இருக்கிறது” என்று வெளிப்படையாகவே பேசினார்.
பாகிஸ்தான் அணியின் பீல்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் சனா, தங்களுடைய அணியின் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டும் என்று பேசினார். இது குறித்துப் பேசிய அவர் “இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் நன்றாகச் செயல்பட்டோம். ஆனால் எங்களுடைய பீல்டிங் மற்றும் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். வரும் தொடர்களில் சிறப்பாக விளையாடுவோம்” எனவும் தெரிவித்தார்.