கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!
டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் அணி தங்களது 2 வது தோல்வியைத் தழுவி உள்ளனர்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள். இதற்கு முன் நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணியுடனான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கினார்கள்.
இதனால், இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதனால், அதிரடியாக ரன் சேர்க்கலாம் என பேட்டிங் களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்களது பவுலிங் மூலம் ட்விஸ்ட் கொடுத்தனர்.
அதன்படி, இலங்கை அணி கொத்து கொத்தாக விக்கெட்டை அடுத்தடுத்து இழந்து மோசமாக தடுமாறியது. இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் ஹர்ஷிதா மாதவியும், நிலாக்ஷி டி சில்வாவும் இணைந்து போராடி ரன்களை சேர்த்தனர். ஆனாலும், இலங்கை மகளிர் அணியின் ஸ்கோர் உயரவில்லை.
இறுதியில், 20 ஓவர்கள் பேட்டிங் விளையாடிய இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் போராடி ரன் சேர்த்த ஹர்ஷிதா மாதவி 23 ரன்களும், நிலாக்ஷி டி சில்வா 29 ரன்களும் எடுத்திருந்தனர்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியில் சிறப்பாக பந்து வீசிய மேகன் ஷட் 3 விக்கெட்டுகளும், மோலினக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இலங்கை அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மிகவும் எளிதான ஸ்கோரான 94 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் களமிறங்கியது.
அதிரடியாக தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் முதல் 3 ஓவர்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழக்க எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி இருவரின் கூட்டணியால் ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது. அதிலும், சற்று அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா தொடக்க வீராங்கனையான பெத் மூனி இறுதி வரை நின்று அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.
இறுதியில், 14.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றிக்கு பங்காற்றிய பெத் மூனி 38 பந்துக்கு 43* ரன்கள் எடுத்திருந்தார். அதே போல இலங்கை அணியில் சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, உதேஷிகா பிரபோதனி தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி நடைபெற்று வரும் இந்த மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், இலங்கை மகளிர் அணி இந்த தோல்வியின் மூலம் இந்த தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால், இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்வி குறியாக அமைந்துள்ளது.