ISLFootball: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஏ.டி.கே. மோகன் பகான்.. 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப்போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் 7-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், அரையிறுதி போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதியது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இரு அணிகளும் சிறப்பாக ஆடியது. முதல் சுற்றில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் ட்ராவில் முடிந்தது. அதன்பின் நேற்று நடந்த போட்டி, சூடு பிடித்தது. போட்டி தொடங்கிய 38-வது நிமிடத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, முதல் கோலை அடித்தது. பின்னர், 68-வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக கவுகாத்தி அணி, 74-வது நிமிடத்தில் கோல் அடித்தது.
81-வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு லட்டு போல ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அந்த அணியின் லூயிஸ் மச்சடோ அடித்தார். அப்பொழுது அவர் கோல் கம்பத்திற்கு வெளியே பந்தை அடித்து பெனால்டியை வீணாக்கினார். இதனால் ரசிகர்கள் பெருமளவில் ஏமாற்றம் அடைந்தனர். இறுதியாக ஏ.டி.கே. மோகன் பகான் 2-1 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது.
முதலாவது ஆட்டத்தின் முடிவையும் சேர்த்து ஏ.டி.கே. மோகன் பகான் அணி, 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைதொடர்ந்து வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எப்.சி.யுடன் மோதவுள்ளது.