AsianGames2023: பாய்மரப்படகு போட்டி..இந்திய வீரர் விஷ்னு சரவணன் வெண்கலம்.!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டியில், 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.இதில் 699 இந்திய வீரர், வீராங்கனைகளை 39 போட்டிகளில் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான டிங்கி ஐஎல்சிஏ-7 பாய்மரப் படகு போட்டியில் இந்திய வீரர் விஷ்னு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்த பாய்மரப்படகு போட்டியில் 34 புள்ளிகளைப் பெற்று விஷ்னு சரவணன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவிற்காக வெண்கலம் வென்ற விஷ்னு சரவணன் தமிழகத்தின் வேலூரைச் சேந்தவர் ஆவார். இந்த போட்டியில் சிங்கப்பூரின் ஜுன் ஹான் ரியான் லோ 26 புள்ளிகளை பெற்றுத் தங்கம் வென்றுள்ளார். அதோடு தென் கொரியாவின் ஜீமின் எச்ஏ 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சரவணன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டுள்ளார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டில் பாய்மரப் படகு போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 19 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. அதேபோல, சீனா 62 தங்கம், 35 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 110 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.