AsianGames2023: 50 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் பிரிவில் வெள்ளி வென்று இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் அசத்தல்.!
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இந்த ஆசிய விளையாட்டு போட்டி 6 வது நாளான இன்றும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று 3 நிலை கொண்ட ஆடவர் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரரான தோமர் ஐஸ்வரி பிரதாப் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அதன்படி, 22 வயதான பிரதாப் சிங் 459.7 புள்ளிகள் எடுத்து, 3 நிலை கொண்ட ஆண்கள் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இதனால் ஆசிய விளையாட்டில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
இதில் சீனாவின் லின்சு 460.6 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றுள்ளார். அதேபோல சீனாவின் ஜியாமிங் 448.3 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் ஸ்வப்னில் சுரேஷ் 438.9 புள்ளிகளில் நான்காவது இடத்தில உள்ளார். ஆசிய விளையாட்டில் ஐஸ்வரி பிரதாப் சிங், இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப்பதக்கம் அடங்கும்.
இதற்கு முன்னதாக நடந்த 3 நிலை கொண்ட ஆடவர் அணிக்கான 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 1,769 புள்ளிகளுடன் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றது. சீன ஆடவர் அணி 1,763 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த பிரிவில் இப்போது வரை உலக சாதனையாளராக 1,761 புள்ளிகளுடன் அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 32 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. அதேபோல, சீனா 95 தங்கம், 56 வெள்ளி மற்றும் 28 வெண்கல பதக்கங்களுடன் 179 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. கொரியா 24 தங்கம், 24 வெள்ளி மற்றும் 41 வெண்கல பதக்கங்களுடன் 89 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.