ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!
பாரா ஆசிய விளையாட்டு தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதில், இந்தியா 100க்கும் மேல் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த சமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது .
பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ள நிலையில், பதக்கங்களும் குவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய பாரா விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் 73.29 மீட்டர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார் சுமித் அன்டில்.
மேலும், ஈட்டி எறிதலில் 62.06 மீட்டர் தூரம் எறிந்த இந்தியாவின் புஷ்பேந்திர சிங் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். இதுபோன்று, பாரா ஆசிய விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா படேல் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல், பாரா ஆசிய விளையாட்டில் 200 மீட்டர் தடகள பிரிவில் இந்தியாவின் நாராயண் தாகூர் வெண்கலம் வென்றுள்ளார்.
மேலும், 200 மீட்டர் ஒட்டப்பந்தியத்தின் டி.37 பிரிவில் இந்திய வீரர் ஸ்ரேயான்ஸ் திரிவேதி வெண்கலம் வென்றுள்ளார். எனவே, பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 10 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 165 பத்தகங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.