ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் முதலிடம்.! இந்தியாவுக்கு 3வது தங்கம்
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் அக்.8 வரை நடைபெறுகிறது. இதில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி குதிரையேற்றத்தில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் விளையாட்டில் திவ்யான்ஷ் சிங், பிரதாப் சிங் தோமர், பாலாசாகேப் பாட்டீல் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. இதில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் முதல் தங்கம் ஆகும். இதனையடுத்து ஆசிய விளையாட்டு போட்டிக்கான மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி போட்டி பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய மகளிர் அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. இறுதியாக இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்ற போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் அனுஷ், ஹிருதய், திவ்யாகிருதி மற்றும் சுதிப்தி ஆகியோர் 209.205 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மொத்தமாக 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 12 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.