Asian Games: 19வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று சீனாவில் தொடங்குகிறது!
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்.8 வரை நடைபெற உள்ளது. கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை ஆசிய விளையாட்டு போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைக்கிறார். அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறுகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். கடந்த முறை இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது.
இதனிடையே, ஆசிய விளையாட்டு போட்டிகளில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியா – சீனா எல்லையில் இருப்பதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பால் ஆசிய போட்டி தொடக்க விழாவில் பங்கேறக் இருந்த இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.