ஆசிய விளையாட்டு போட்டி..! பேட்மின்டனில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய ஜோடி.!
சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப்-23ம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பல பதக்கங்களை வென்று நாட்டைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தியா ஆசிய விளையாட்டில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
மேலும், தொடர்ந்து பதக்க வேட்டையை இந்தியா நடத்தி வருகிறது. அதன்படி, இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் பேட்மின்டன் பிரிவில் ஆண்களுக்கான இரட்டையர் தங்கப் பதக்கப் போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக சாத்விக் சாய்ராஜ், சந்திரசேகர் இணை கலந்துகொண்டனர். இவர்களுக்கு போட்டியாக கொரியாவின் சோல்கியூ, வோன்ஹோ ஜோடி விளையாடியது.
இதில் சாத்விக் சாய்ராஜ், சந்திரசேகர் இணை 21-18, 21-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், கொரியா அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இது பேட்மின்டனில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம் ஆகும். இதனால் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்தியா 26 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 101 பதக்கங்களைப் பதிவு செய்து, பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.