ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு..! பிரதமர் இரங்கல்..!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.
டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை பயிற்சியாளர் ஆனார்.
குத்துச்சண்டையில் இவரது பங்களிப்பு காரணமாக நாட்டின் சிறந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கினர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவருக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. கொரோனாவிலிருந்து குணமடைந்த இவர் கல்லீரல் புற்றுநோய் காரணத்தால், இன்று காலை மணிப்பூரிலுள்ள செக்தா கிராமத்தில் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய வயது 42.
இவரது மறைவால் விளையாட்டுத்துறையில் உள்ள பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தந்து, மேரி கோம், விஜேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டின் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் டிங்கோ சிங்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், டிங்கோ சிங் விளையாட்டில் சூப்பர் ஸ்டார். இவர் குத்துசண்டை விளையாட்டில் சிறந்த வீரராகவும், குத்துச்சண்டையை பிரபலப்படுத்தவும் பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். இவரது மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. இவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Shri Dingko Singh was a sporting superstar, an outstanding boxer who earned several laurels and also contributed to furthering the popularity of boxing. Saddened by his passing away. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 10, 2021