Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டியில் 71 பதக்கம்.! வரலாற்று சாதனை படைத்த இந்தியா.!

19th Asian Games

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் 11வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அதன்படி, இன்று காலை ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஓஜாஸ் தியோடேல் மற்றும் ஜோதி சுரேகா வென்னம் அடங்கிய இந்திய கலப்பு கூட்டு வில்வித்தை அணி தங்கம் வென்றது. இது இந்தியாவின் 71வது பதக்கம் ஆகும். இதன் மூலம் இந்தியா ஒரே பதிப்பில் தனது சிறந்த ஆசிய விளையாட்டு பதக்க எண்ணிக்கை சாதனையை முறியடித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றது. முந்தைய நான்கு ஆசிய விளையாட்டுகளிலும் இந்திய அணி 50 பதக்கங்களைக் கடந்தது. 19வது ஆசிய போட்டிகள் தொடங்கி 10வது நாள் முடிவில் இந்தியா 69 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது.

இந்த நிலையில் 11 வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா 71 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 164 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலம் என 300 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்