IND vs BAN : ‘வரலாறு படைத்தார் அஸ்வின்’! ஒரே டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள்!
நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் அஸ்வின், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் ரெக்கார்டை சமன் செய்துள்ளார்.
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. நடந்த முடிந்த இந்த டெஸ்ட் தொடரில், தொடரின் நாயகன் விருதை சுழல் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி உள்ளார்.
இந்த தொடரில் சிறப்பாக ஒரு ஆல்-ரவுண்டர் பெர்ஃபாமன்ஸை கொடுத்த அவர் மொத்தமாக 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும், 114 ரன்களும் எடுத்திருப்பார், அதில் ஒரு சதமும் அடங்கும். இந்த தொடரில் இவர் கைப்பற்றிய 11 விக்கெட்டுகளின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இதுவரை நடைபெற்ற மூன்று சீசன்களிலும் தலா 50 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார்.
இதன் மூலம் இதுவரை நடைபெற்ற 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் பௌலர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். மேலும் , 2019-ல் தொடங்கப்பட்ட இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளும், 2021-ல் நடைபெற்ற தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளும், தற்போது நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் இந்த உலக கோப்பை தொடரில் மட்டும் 182 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார். இதனால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறார். அதே நேரம் இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா வீரரான நாதன் லியோன் 187 விக்கெட்டுகள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இதன் மூலம், அஸ்வின் வரும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் இந்த பட்டியலிலும் முதலிடம் பிடித்து விடுவார். அதே நேரம் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா வீரரான ஜோஸ் ஹாசில்வுட் 51 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
அஸ்வின் இன்னும் 2 விக்கெட்டுகள் எடுத்தல் இதிலும் முதிலிடம் பெறுவார். இதைத் தொடர்ந்து மற்றொரு சாதனையாக, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில், இந்திய முன்னாள் வீரரான ஜகீர் கான், 7 போட்டிகளில் 31 விக்கெட்களை எடுத்திருந்தார். அஸ்வின், வங்கதேச அணிக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்களை எடுத்து, இந்த ரெக்கார்டை சமன் செய்துள்ளார்.
மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகள் அதிக முறை தொடர் நாயகன் விருதை முன்னாள் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் பெற்றுள்ளார். அவர் 60 தொடர்களில் 11 முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். தற்போது, 39 தொடர்களில் விளையாடி அஸ்வின் இவரது சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். அடுத்ததாக நடைபெற உள்ள நியூஸிலாந்து டெஸ்ட் தொடரிலும் இவர் தொடர்நாயகன் விருதை பெற்றால் இந்த சாதனையையும் இவர் முறியடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.