கோப்பா அமெரிக்கா : கனடாவை வீழ்த்தி …2-வது முறையாக இறுதி போட்டிக்கு நுழைந்த அர்ஜென்டினா ..!
கோப்பா அமெரிக்கா : இன்று நடைபெற்ற இத்தொடரின் அரை இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என கனடா அணியை வீழ்த்தியுள்ளது.
கடந்த ஜூன் 20 -ம் தேதி அன்று தொடங்கிய இந்த கோப்பா அமெரிக்கா தொடரானது தற்போது அரை இறுதியை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த அரை இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி, போட்டியின் முதல் நிமிடம் முதலே ஆதிக்கத்தை செலுத்தினார்கள்.
இதன் காரணமாக போட்டியின் 23’வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் அல்வாரெஸ் முதல் கோலை அடித்து அசத்தி இருப்பார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி விரைவாகவே 1-0 என முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து விளையாடிய கனடா அணி பல முயற்சிகள் செய்தும் முதல் பாதியில் சமன் செய்யும் கோலை அடிக்க முடியாமல் திணறியது. இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது.
அதை தொடர்ந்து போட்டியின் 2-ஆம் பாதி தொடங்கப்பட்ட நிலையில், போட்டியின் 51’வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி அபாரமாக தனது அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் கோப்பா அமெரிக்கா 2024 தொடரின் முதல் கோலை மெஸ்ஸி நேற்று பதிவு செய்தார். மேலும், தொடர்ந்து நடந்த போட்டியில் கனடா அணி ஆதிக்கம் செலுத்த முடியாமல் அர்ஜென்டினா அணியிடம் வீழ்ந்தது.
ஆட்ட நேர முடிவில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்று அரை இறுதி போட்டியில் வெற்றி கண்டு தொடர்ந்து 2-வது முறையாக கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், நாளை அதிகாலை உருகுவே மற்றும் கோலம்பியா அணிகளுக்கு இடையே நடக்கும் 2-ஆம் அரை இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணி அர்ஜென்டினா அணியுடன் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.