183-க்கு ஆல் அவுட்.! பும்ரா, ஷமியின் வேகத்தில் சுருண்டது இங்கிலாந்து அணி.!
இங்கிலாந்து அணி 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் விளையாட்டு போட்டியில் பங்கேற்க இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் களமிறங்கிய ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின்னர் களமிறங்கிய ஜாக் கிராவ்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த 27 ரன்னில் பண்ட்டிடம் கேட்சை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை இழக்க பின்னர் களம் கண்ட ஜோ ரூட் , ஜானி பேர்ஸ்டோ இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
நிதானமாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோ 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் அரைசதம் அடித்து 64 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழக்க அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை கடைசியில் இறங்கிய சாம்கரண் 27 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் பறித்தனர்.