“அந்த 5 பேரை ஏலத்தில் எடுக்க”…பெங்களூரு அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!
பெங்களூர் அணி யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் இப்போதே எழுந்துவிட்டது. இதற்கான மெகா ஏலமானது வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.
அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்த விவரத்தைத் தீபாவளி பண்டிகையையொட்டி தெரிவித்திருந்தார்கள். அதில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்க வைக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், முன்னாள் பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கலந்துகொண்டபோது 5 வீரர்களை ஏலத்தில் எடுக்கவேண்டும் என பெங்களூர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். இது குறித்துப் பேசிய அவர் ” பெங்களூர் அணி தற்போது தங்களுடைய கைகளில் 83 கோடி செலவு செய்ய பணம் வைத்து இருக்கிறது. இந்த பணத்தைத் தரமான வீரர்களை எடுத்து செலவு செய்து அணியையும் மேம்படுத்தலாம்.
அவர்கள் இந்த முறை ஏலத்தில் எடுக்க 5 வீரர்களை நாள் அவர்களுக்குப் பரிந்துரை செய்வேன். அதில் குறிப்பாக நான் அணியின் சுழற்பந்து வீச்சில் கவனம் செலுத்தி விடுவிக்கப்பட்ட யுஸ்வேந்திர சாஹலை அணியில் திரும்பி ஏலத்தில் எடுக்கவேண்டும் என்று நான் சொல்வேன். அவர் பெங்களூர் அணிக்காகப் பல ஆண்டுகள் விளையாடித் திருப்பு முனையாக அமைந்து இருக்கிறார். எனவே, அவரை போன்ற ஒரு வீரர் விடுவிக்கப்படக்கூடாது. அவரைப்போல, ரவிசந்திரன் அஷ்வினையும் ஏலத்தில் எடுக்கத் திட்டமிடவேண்டும்.
நம்மளுடைய அணிக்கு அவர் கண்டிப்பாகப் பெரிய உதவியாக இருப்பார் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் நம்மளுடைய அணியிலிருந்தார்கள் என்றால் நம்மளுடைய பந்துவீச்சு தரம் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எனவே, நான் பெங்களூர் அணி ஏலத்தில் எடுக்க முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றால் இவர்களுக்குத் தான் கொடுப்பேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ் ” வேக பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முகமது ஷமியை எடுக்க முயற்சி எடுக்கவேண்டும். உங்களால் அவரைப் பெற முடியாவிட்டால், அர்ஷ்தீப் சிங்கைப் பிடித்துக் கொள்ளுங்கள். இவர்களை அணியில் எடுத்தால் நிச்சயமாகப் பந்துவீச்சு இன்னுமே வலுவாகிவிடும். அதைப்போல, தரமாகப் பந்துவீசி விக்கெட்கள் எடுக்கக் கூடிய ககிசோ ரபாடாவை நாம் நம்மளுடைய அணிக்கு ஏலத்தில் எடுக்கவேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை. எனவே, நான் சொன்ன இவர்கள் 5 பேரை எடுக்கலாம். முடிந்த அளவுக்கு நன்றாக யோசித்து வீரர்களைத் தேர்வு செய்யவேண்டும்” எனவும் ஏபி டி வில்லியர்ஸ் தேர்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.