14 வயதுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார், சென்னையை சேர்ந்த இளம்பரிதி
14 வயதுக்குட்பட்டோரின் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 13 வயது ஏ.ஆர்.இளம்பரிதி தங்கம் வென்றார்.
ருமேனியா நாட்டிலுள்ள மாமியாவில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இளம்பரிதி, ருமேனியா வின் பிலிப் மாகோல்ட்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார். தனது 34 ஆவது நகர்வில் இளம்பரிதி இந்த வெற்றியைப் பெற்றார். மொத்தம் 11 சுற்றுகளில் 9.5 புள்ளிகளுடன் அவர் இந்த டைட்டில் வென்றார்.
இளம்பரிதி, இந்த தொடரில் மொத்தம் 9 வெற்றிகள், 1 தோல்வி மற்றும் 1 போட்டியை ட்ரா உடன் முடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவரது செஸ் தரப்பட்டியலில் 57 புள்ளிகள் உயர்ந்து 2269 புள்ளிகளுடன் உள்ளார்.
இளம்பரிதியின் செஸ் பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தர், இது குறித்து பேசும் போது இளம்பரிதி 7 வது சுற்றில் ரஷ்ய வீரர் சவ்வா வெடோகினுடன் தோல்வி அடைந்தாலும், மீண்டு வந்து அடுத்த 4 சுற்றுகளையும் வென்று சாம்பியன் ஆனது மகிழ்ச்சி தருகிறது என்று கூறினார். இளம்பரிதியின் செஸ் பயிற்சியாளர், ஷ்யாம் சுந்தரும் கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்பரிதி, முதன்முதலில் 2017 இல் நடைபெற்ற ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு 2019 இல் டெல்லி யில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.