5 மணி நேரமாக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் – சாம்பியன் பட்டத்தை வென்ற நடால்!
உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக ரபேல் நடால் 21-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், மேட்டியோ பெரட்டினியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்தார். இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நடால் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்த நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடால் – மெட்வெடேவ்(ரஷியா) இடையே போட்டி நடைபெற்றது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2ம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ்-ஐ வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார். சுமார் 5 மணிநேரமாக நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தின் முதல் செட்டுகளில் கடும் பின்னடைவில் இருந்த ரபேல் நடால், அடுத்தடுத்த 3 சுற்றுகளிலும் தொடர்ந்து வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அதன்படி, ரஃபேல் நடால் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தினார். உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 35 வயதான ரபேல் நடால் 21-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரரை சாதனையை முறியடித்து 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஆடவர் டென்னிஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றியிருந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ரபேல் நடால் வென்றுள்ளார். கடும் பின்னடைவில் இருந்த நடால், அடுத்தடுத்து சுற்றுகளிலும் தொடர்ந்து வென்று சாம்பியன் படத்தை வென்றதால் ரசிகர்கள் கண்ணீருடன் ஆரவாரம் செய்து வருகின்றனர்.