இந்தியாவுக்கு 4- வது பதக்கம்! வெண்கலம் வென்றார் மணீஷ் நர்வால்!
பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை சேர்த்துள்ளார் மணீஷ் நார்வால்.
பாராலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட மணிஷ் நர்வால் பங்கேற்று விளையாடினார். தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவர் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார்.
இதன் மூலம் நிலையான புள்ளிகளை பெற்று வந்த மணீஷ், தென்கொரிய வீரரான ஜோ ஜியோங்கிற்கு சவாலாக விளையாடினார். ஆனால், ஜோ ஆதிக்கம் செலுத்தி 237.4 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய மணீஷ் இறுதியில் 234.9 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார்.
வெறும் 22 வயதான மணீஷ் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 50மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் 2024 தொடரில், இந்தியா அணி ஒரே நாளில் 4வது பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற பெண்களுக்கான 100மீ. பாரா ஓட்டப்பந்தய போட்டியில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், பெண்களுக்கான 10மீ. ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகரா தங்கப்பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், மொத்தம் 4 பதக்கங்களுடன் இந்தியா அணி இந்த பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 10வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஒரே நாளில் 4 பதக்கத்தை வென்றதால் இந்த முறை பாரா ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்களுடன் அடுத்த கட்ட சாதனையை இந்தியா படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.