உலகக்கோப்பை எதிரொலி பொருளாதாரத்தில் 22,000 கோடி வருவாய்..?
இன்று தொடங்கியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் பண்டிகைக் காலங்கள் நடைபெற உள்ளதால் இந்தியப் பொருளாதாரத்தில் 22,000 கோடி வருவாய் சேரும் என்று பொருளாதார வல்லுநர்கள் ஜாஹ்னவி பிரபாகர் மற்றும் அதிதி குப்தா தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு மற்றும் சுற்றுலா துறையில் 6% லிருந்து 8.5% ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை நடத்தப்படுவதால் அடுத்த மூன்று மாதத்திற்கு சில்லறை வியாபாரம் முதல் மொத்த வியாபாரம் வரை ஏற்றம் இருக்கும் என தெரிவித்தனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் உடன் சேர்த்து முக்கியமான சில பண்டிகைகள் வருவதால் மக்களின் ஷாப்பிங் பழக்கம் 25% வரை அதிகரிக்கும் எனவும் இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பணவீக்கம் 0.15% – 0.25% வரை உயரக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை 552 மில்லியன் இந்திய பார்வையாளர்கள் தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்ப்பார்கள் எனவும் இதனால் 105 முதல் 120 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும் என கூறப்படுகிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர் காலகட்டத்தில் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் வாடகைகள் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்த டிக்கெட் விற்பனை, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் உணவு விநியோகம் மீதான சரக்கு மற்றும் சேவை வரிகளின் மீதான வரி வசூல் மத்திய அரசின் நிதிக்கு உதவும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் வருமானத்தில் இந்த வருவாய் அதிகரிப்பு, தேர்தல் நேரத்தில் பல்வேறு அரசு நடவடிக்கைகளுக்கு 20% வரை உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.