2022 ஆம் ஆண்டின் உலக டென்னிஸ் சாம்பியன்கள்! ரஃபேல் நடால் மற்றும் இகா ஸ்விடெக் தேர்வு.!
2022 ஆம் ஆண்டிற்கான டென்னிஸ் உலக சாம்பியன்களாக ரஃபேல் நடால் மற்றும் இகா ஸ்விடெக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு(ITF – International Tennis Federation) சார்பில் ஒவ்வொரு வருடமும் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆடவர்களுக்கான பிரிவில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த ரஃபேல் நடால், 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டில் மட்டும் நடால் ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். நடால், மொத்தமாக 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். மேலும் நடால் 5-வது முறையாக உலக டென்னிஸ் சாம்பியன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான பிரிவில் போலந்து நாட்டவரான இகா ஸ்விடெக் 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விருதைப்பெறும் முதல் போலந்து வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 67 போட்டிகளில் வெற்றி, இதில் 37 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி என பல வெற்றிகளைக் குவித்திருக்கிறார்.