சமூக நீதியென்று பேசி;தூய்மைப் பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா? – சீமான்..!

சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப் பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா?என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக அரசும் வஞ்சிப்பு:

“முந்தைய அதிமுக அரசால் எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரேநாளில் ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்களை, திமுக அரசும் பணியில் சேர்த்துக்கொள்ள மறுத்து வஞ்சித்து வருவது ஏமாற்றமளிக்கிறது. தற்காலிக தூய்மைப்பணியாளர்களாக இருந்து பத்தாண்டுகளுக்கு மேலாக சென்னை மாநகராட்சியைத் துப்புரவுசெய்து, பராமரித்த தூய்மைப்பணியாளர்கள், தங்களது பணிநியமனம் கோரிப் போராடி வரும் நிலையில், அதனைக் கண்டும் காணாதது போலக் கடந்து செல்வதும், அப்போராட்டங்களை அதிகாரத்தைக் கொண்டு நசுக்க முனைவதுமான திமுக அரசின் தொடர் செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.

சொற்களால் விவரிக்க இயலாத மகத்துவம்:

நாட்டு மக்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவர்களைப் போல, சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காவலர்களைப் போல, நோய்நொடியற்ற நலவாழ்வுக்காக நாளும் உழைக்கும் தூய்மைப்பணியாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள்; கொண்டாடத்தக்கவர்கள்.

மருத்துவர்கள், காவலர்கள் போலவே தூய்மைப்பணியாளர்களது பணியும், எவ்வித நேரக்கட்டுப்பாடுகளுக்கும் உட்படாதப் பெரும்பணியாகும். நாள்தோறும் குப்பைகளாகவும், கழிவுகளாகவும் மக்கள் வெளியேற்றும் பொருட்களை அப்புறப்படுத்தி, அர்ப்பணிப்புணர்வுடன் சாலைகளைத் தூய்மைப்படுத்தும் சுகாதாரப்பணியென்பது சொற்களால் விவரிக்க இயலாத மகத்துவம் கொண்டது.

காலாட்படை வீரர்களின் துணிவுக்கும், ஈகத்திற்கும் ஒப்பானது:

அத்தகையவர்கள் இயற்கைப்பேரிடர், நோய்த்தொற்றுப்பரவல் போன்ற அசாதாரணக்காலங்களில் தங்களது உயிரைப் பொருட்படுத்தாது மக்களின் நலனுக்காக நாள்தோறும் உழைக்கின்றனர். அதிலும் இதுபோன்ற பெருந்தொற்றுக்காலங்களில் அவர்களது களப்பணி என்பது போர்க்களங்களில் உயிரை முன்னிறுத்தி முன்செல்லும் காலாட்படை வீரர்களின் துணிவுக்கும், ஈகத்திற்கும் ஒப்பானதாகும்.

ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல்:

அத்தகைய தூய்மைப்பணியாளர்களைத் தற்காலிக பணியாளர்களாகவே வைத்திருந்து, மிகக்குறைந்த சம்பளத்திற்குப் பணிபுரியச்செய்து, அவர்களது உழைப்பினை உறிஞ்சியதோடு மட்டுமல்லாது, பணிநீக்கம் செய்து விரட்டுவதென்பது ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலாகும்.

எதுவும் கிடைப்பதில்லை:

பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், பணி நிரந்தரம் செய்யப்படாமையால் அரசு வழங்கக்கூடிய குழு காப்பீடு, ஓய்வூதியம், உள்ளிட்ட உரிமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தற்போதையப் பேரிடர் காலத்தில் மற்ற துறையினருக்கு வழங்கப்பட்ட பேரிடர்காலச் சிறப்பு ஊக்கவூதியம்கூட அவர்களுக்குத் தரப்படவில்லை. இவ்வாறு எவ்வித உரிமைகளும் கிடைக்காதபோதும் மனம் தளர்வுறாது, உ தங்களது அரும்பணியிலிருந்து பின்வாங்காது, பெருந்தொற்றின் முதல் அலையிலிருந்து ஓராண்டாக ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனர் தூய்மைப்பணியாளர்கள்.

வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சியக் கொடுங்கோன்மை:

சமூகத்தின் நலமிக்க சுகாதார வாழ்வுக்காகத் தங்களையே முழுமையாக அர்ப்பணித்து, உழைத்திட்ட அத்தகைய தூய்மைப்பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியமும், ஊக்கத்தொகையும் வழங்கி அங்கீகரித்திருக்க வேண்டிய அப்போதைய அதிமுக அரசு, அவர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்து வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சியக் கொடுங்கோன்மையை நிகழ்த்தியது.

ஐயா ஸ்டாலின்;மனச்சான்றில்லா இழிசெயல்:

அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என வாக்குறுதியும் அளித்தார் அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ஐயா ஸ்டாலின். தற்போது தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி முதல்வராகப் பதவியேற்று மூன்று மாதங்களை நெருங்கிய பிறகும்கூட, வாக்குறுதி அளித்தது போல அவர்களைப் பணியமர்த்தாமல், அலட்சியம் செய்வதும், போராடும் தூய்மைப்பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரைக் கொண்டு மிரட்டுவதும், தாக்குவதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது துளியும் மனச்சான்றில்லா இழிசெயலாகும்.

வெட்கக்கேடு:

சமூக நீதி எனப்பேசி அரசியல் செய்யும் திமுக அரசு, சமூகத்தின் விளிம்பு நிலையிருக்கும் தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்ததோடு, அவர்களது போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி ஒடுக்கி அவர்கள் குரல்வளையை நெரிக்க முயல்வது வெட்கக்கேடானது. இத்தருணத்தில், தங்களின் வாழ்வாதார உரிமைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் முன்னெடுக்கும் மிக நியாயமான போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி, இறுதிவரை துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.

தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்களது பணி நியமனம்:

ஆகவே, தூய்மைப்பணியாளர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மனதிற்கொண்டு, அவர்களை மீண்டும் பணியமர்த்தி உரிய ஊதியத்துடன் நிரந்தரப்பணியாளர்களாக மாற்ற வேண்டும் எனவும், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்களது பணி நியமனத்தை முற்றுமுழுதாகத் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.