சந்திரயான்-3ன் சென்சார் – என்ஜின்கள் செயலிழந்தால் என்ன ஆகும்? இஸ்ரோ தலைவர் சொல்வதென்ன!
சந்திரயான்-3யின் அனைத்து சென்சார்கள் அல்லது என்ஜின்கள் செயலிழந்தாலும் கூட, விக்ரம்’ லேண்டர் நிலவவின் நிலப்பரப்பில் மென்மையாக தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
நேற்றைய தினம் தன்னார்வலர்கள் நடத்திய, சந்திராயன்-3 பாரதத்தின் பெருமை கூறிய விண்வெளித்திட்ட விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், ‘விக்ரம்’ லேண்டர் தோல்விகளைச் சமாளித்து நிலவவின் நிலப்பரப்பில் தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதுவுமே வேலை செய்யவில்லை என்றாலும், அது நிலவில் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றார்.
அதாவது, அனைத்து சென்சார்களும் தோல்வியடைந்தாலும், என்ஜின்கள் சேலை செய்யவில்லை என்றாலும், ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கும். அப்படித்தான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது, உந்துவிசை அமைப்பு நன்றாக வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
இந்நிலையில், விண்கலத்தின் திட்டமிடப்பட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட பணி நடைபெற இருக்கிறது. சமீபத்தில், சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் போது எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. நிலவை சுற்றி வந்த பின் ஆக.23ல் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.