விண்கல்லில் இருந்து இரண்டு புதிய கனிமங்கள் கண்டுபிடிப்பு…!
15-டன் விண்கல்லில் இருந்து புதியதாக இரண்டு கனிமங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!!
2020 ஆம் ஆண்டு சோமாலியா நாட்டில் இருந்து ஒரு பெரிய விண்கல், கண்டுபிடிக்கப்பட்டது. 15 டன் எடை கொண்ட அந்த விண்கல்லின் மாதிரியில் இருந்து, கனடா நாட்டின் விஞ்ஞானிகள் குழு, இதுவரை கண்டுபிடிக்கப்படாத இரண்டு புதிய கனிமங்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் 3ஆவது கனிமம் கண்டுபிடிக்கும் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல்லானது கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலிய நாட்டின், கிராமப்புற பகுதியான எல் அலியில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த விண்கல்லுக்கு, எல் அலி என கனடா நாட்டின் விஞ்ஞானிகள் குழுவானது பெயர் வைத்தனர்.
இது குறித்து ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் பூமி மற்றும் வளிமண்டல அறிவியல் பேராசிரியர் கிறிஸ் ஹெர்ட், கூறும்போது இந்த விண்கல் பாறையானது அசாதாரணமான ஒன்று, இதனுள் இருந்து கண்டறியப்பட்ட கனிமங்கள் அறிவியலுக்கு புதிதானது.
இது போன்ற கனிமங்கள் 1980 களில் அறிவியல் சோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் தற்போது இயற்கையாக இந்த கனிமங்கள் பாறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அசாத்தியமானது. 3ஆவது கனிமமும் சோதனையில் இருக்கிறது என்றும் கிறிஸ் ஹெர்ட் கூறினார்.
இந்த கனிமங்களுக்கு எலாலைட் மற்றும் எல்கிஸ்டன்டோனைட் என பெயர்கள் அறிவிக்கப்பட்டது. எலாலைட் என்ற கல்லின் பெயரானது அந்த கல் விழுந்த கிராமத்தின் பெயரான எல் அலியின் பெயரை வைத்தும், இரண்டாவது கனிமத்தின் பெயரானது விஞ்ஞானி லிண்டி எல்கின்ஸ்-டாண்டனின் பெயரை கொண்டும் வைக்கப்பட்டது.
பேராசிரியர் கிறிஸ் ஹெர்ட்-ன் ஆய்வின்படி இந்த விண்கல்லானது அதிக அடர்த்தி கொண்டது எனவும் காந்த தன்மை கொண்டது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், விண்கல்லை மேலும் ஆய்வு செய்வதற்கு முன்பாக விண்கல், சீனாவிற்கு விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.