ஸ்பேஸ் X உதவியுடன் 4700 கிலோ எடையுள்ள GSAT N2 ஏவப்பட்டது!
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இஸ்ரோவின் GSAT N2 வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஃபுளோரிடா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ GSAT N2 என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
GSAT N2 வடிவமைப்பு :
இஸ்ரோ வடிவமைத்த இந்த GSAT N2 செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது. GSAT N2 என்பது இஸ்ரோ உருவாக்கிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இன்று அதிகாலை ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், திட்டமிட்டபடி துல்லியமாக அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் 48 ஜிபிபிஎஸ் டேட்டா டிரான்ஸ்மிஷன் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பிராட்பேண்ட் சேவைகளை இதனால் மேம்படுத்தவும், நாடு முழுவதும் விமானத்தில் உள்ள இணைய இணைப்பை வழங்கவும் இந்த செயற்கைக்கோளானது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி மிஷன்க்கு (Smart City Mission) தேவையான தகவல் தொடர்பு தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் இன்னும் 14 ஆண்டுகள் பூமியின் சுற்றுப் புறத்தில் செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ் X-ன் உதவி எதற்கு?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில், 4000 கிலோ எடை உள்ள செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட் தான் இருக்கிறது. ஆனால், இஸ்ரோ உருவாக்கிய GSAT N2 4700 கிலோ அடங்கியதாகும். இதனால் தான் இஸ்ரோ, ஸ்பேஸ் X நிறுவனத்தின் உதவியை நாடி இருக்கிறது.
இதற்கு முன்னதாக எடை அதிகம் இருக்கும் செயற்கைக்கோளை ஏவுவதற்கு இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி மையத்தை நாடி இருக்கும். ஆனால், தற்போது தான் முதல் முறையாக ஸ்பேஸ் X உதவியை நாடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ஸ்பைஸ் X நிறுவனத்திலும் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளும் இதுதான்.
GSAT N2 உருவாக்கியதன் இலக்கு?
இந்தியா முழுவதிலும் விமானத்தில், இணையதளம் அதாவது இன்டர்நெட் வசதியை கொண்டு வரவேண்டும் என இந்தியா சமீபத்தில் விதிகளை மாற்றியது. அந்த புதிய விதிகளின்படி, விமானத்தில் பயணிக்கும் பயணிகள் இன்டர்நெட் சேவையை வைஃபை (Wi-Fi) மூலம் பயன்படுத்த முடியும்.
ஆனால், விமானத்தில் மின் அணு சாதனங்கள் உதாரணம் மொபைல், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்த அனுமதித்தால் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த முடியும். இதனால், இஸ்ரோவின் இந்த GSAT N2 செயற்கைக்கோள் எதிர்காலத்திற்கு அடுத்தகட்ட படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.