நிலவை தொடா்ந்து, சூரியனை டார்கெட் செய்த இஸ்ரோ! ஆதித்யா-எல்1 விண்கலம் தயார்!
சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, இந்தியா எதிர்காலத்திற்கான புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. சூரியன் மற்றும் வீனஸ் உள்ளிட்ட பிற கிரகங்களை ஆராயும் பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது, 2030 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலாத் தொழிலைத் தொடங்குவது உள்ளிட்ட பிற லட்சியத் திட்டங்களைத் இந்தியா தொடங்கும் என்று கூறியதோடு, இந்த வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும் என்றாா்.
ஆதித்யா-எல்1
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 (Aditya L1) விண்கலத்தை ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தயாராகி வருகிறது. பெங்களூரு யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து (URSC) இந்த விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவப்படவுள்ளது. ஆதித்யா-எல்1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்தியப் பணியாகும். பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் வைக்கப்படும்.
எல்1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்டப் பாதையில் வைக்கப்படும் ஆதித்யா விண்கலம், சூரியனை எந்த மறைவும் இல்லாமல் தொடர்ந்து பார்ப்பதன் முக்கிய பண்புகளை கொண்டுள்ளது.
ஆதித்யா -எல்1 விண்கலத்தின் சிறப்பு
மின்காந்த துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்பான்களை பயன்படுத்தி ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை இந்த விண்கலம் சுமந்து செல்கிறது. சிறப்பு வான்டேஜ் பாயின்ட் எல்1 ஐப் பயன்படுத்தி, நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன. மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.
ஆதித்யா எல்1 பேலோடுகளின் சூட்கள், கரோனல் வெப்பமாக்கல், கரோனல் மாஸ் எஜெக்ஷன், ப்ரீ-ஃப்ளேர் மற்றும் ஃப்ளேயர் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் போன்ற பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.