Chandrayaan-3: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் இல்லை.! இஸ்ரோ
இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளை சுற்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி, இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்தது.
விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி பல தகவலை பூமிக்கு அனுப்பியது. நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்தது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இதன்பிறகு பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு சென்றது. மேலும், ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்து விட்டது. பின், சூரிய வெளிச்சம் கிடைத்ததும் ரோவரும், லேண்டரும் மீண்டும் செயல்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.
அதன்படி, சிவசக்தி புள்ளியில் நிலவிய -200°C கடுங்குளிர் காரணமாக கடந்த 2ம் தேதி ஸ்லீப் மோடில் வைக்கப்பட்ட ரோவர் மீது தற்போது மீண்டும் வெயில் படத் தொடங்கியுள்ளது. சூரிய ஆற்றலை பெற்று ரோவரை செயல்பட வைக்கும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இதனை இயக்கும் பணியானது இன்று தொடங்கப்பட இருந்த நிலையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ரோவர் மற்றும் லேண்டரில் இருந்து எந்தவித சிக்னலும் வரவில்லை. இதனால் இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர் மற்றும் லேண்டரின் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.As of now, no signals have been received from them.
Efforts to establish contact will continue.
— ISRO (@isro) September 22, 2023