Aditya-L1: ஆதித்யாவின் சுற்றுவட்ட பாதை.! நாளை முதல் முக்கிய பணி துவக்கம்.!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11.50 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும். இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும்.
இந்நிலையில், புவியின் முதல் கட்ட சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு என்பது நாளை திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, “ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி செப்டம்பர் 3, 2023 அன்று சுமார் 11:45 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு திட்டமும் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தவுடன் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளும் செயல்படத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Aditya-L1 started generating the power.
The solar panels are deployed.The first EarthBound firing to raise the orbit is scheduled for September 3, 2023, around 11:45 Hrs. IST pic.twitter.com/AObqoCUE8I
— ISRO (@isro) September 2, 2023