Aditya-L1: சூரியனை நோக்கி முன்னேறும் ஆதித்யா விண்கலம்! 3ம் கட்ட உயரம் அதிகரிப்பு…

Aditya-L1 Mission

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் மூன்றாம் கட்ட சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த வார சனிக்கிழமை (செப்டம்பர் 2) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும்.

இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும். ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்கனவே தொடங்கிவிட்டது. சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.

கடந்த (3.09.2023) அன்று ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து ,செப்டம்பர் 5ம் தேதி இரண்டாம்கட்டமாக புவி சுற்று வட்டப்பாதை 282 கிமீ x 40225 கிமீ உயர்த்தப்பட்டது.

தற்பொழுது, (செப்டம்பர் 10) இன்று ஆதித்யாவின் மூன்றாம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக 3வது சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது 296 கி.மீ x 71767 கி.மீ என்ற புதிய சுற்றுப்பாதையை அடைந்துள்ளதாகவும், அடுத்த கட்ட செயல்பாடு வரும் 15ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்