ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நிரந்தர நீக்கம்

டெல்லியில் போதைபொருள் வழக்கில் சிக்கிய திமுக மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மேற்கு டெல்லியின் பசாய் தாராபூரில் உள்ள குடோன் ஒன்றில் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்கிற போதைப்பொருளை, டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதை கடத்த முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,500 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், தப்பியோடிய அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் நடிகை கயல் ஆனந்தி நடித்து, வரும் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கும் ‘மங்கை’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரே கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.  அதுமட்டுமல்லாது தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மைதீன் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், சலீம் அரசியல் பிரமுகராக இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read More – விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

இந்த மூன்று பேரும் சேர்ந்து தான் சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையில் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்ட ஜாபர் சாதிக் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். அவர் தற்போது திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் நிரந்தரமாக நீக்கப்படுவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Leave a Comment