“வினாவுக்கு விடை கிடைக்கவில்லை” – பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை!

விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம்,நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் என்றும்,எனவே, தொழிற்சாலை விடுதிகளில் தரமான உணவு,அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“காஞ்சிபுரத்தை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுமார் 1000 பெண் தொழிலாளர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை.

சுங்குவார்சத்திரம் பகுதியில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சொந்தமான செல்பேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பூவிருந்தவல்லியில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் 8 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாக வெளியான தவறான செய்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்;அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடத்தினர்.

சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,உண்மை நிலையை விளக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை முறிந்திருந்தால்,நடக்கக்கூடாத நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடும்.

ஆனால்,மிகவும் பொறுமையாக செயல்பட்டு,எந்த தொழிலாளரும் உயிரிழக்கவில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களுடன் காணொலியில் பேசி போராட்டக்காரர்களுக்கு விளக்கியும், தரமற்ற உணவு வழங்கிய விடுதியின் காப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.

தரமற்ற உணவை உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட சக தொழிலாளர்களின் நிலையை அறிவதற்காக நள்ளிரவில் தொடங்கிய போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்றதும்,சுமார் 11 மணி நேரம் போராட்டக் களத்தில் உறுதியாக இருந்ததும் சாதாரணமான ஒன்றல்ல.விடுதியில் தரமற்ற உணவு, அடிப்படை வசதிகள் கூட இல்லாத அவலமான வாழ்க்கைச் சூழல் என கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த வெளியில் சொல்ல முடியாத கொடுமைகள் தான் இந்த அளவுக்கு போராட்டம் நடத்துவதற்கான மனதிடத்தையும், உறுதியையும் அவர்களுக்கு வழங்கி உள்ளன.அவர்களின் குறைகள் உடனே களையப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிப்பதை தடுக்க முடியாது.

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதி மட்டுமல்ல,சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக செயல்பட்டு வரும் பெரும்பான்மையான விடுதிகளின் நிலையும் இதே அளவில் தான் உள்ளன.மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம்,நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் ஆகும்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்ப வறுமை காரணமாக சென்னையிலும், பிற இடங்களிலும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களில் மிகக்குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சேருகின்றனர். அவர்களுக்கான விடுதிகள் சிறைகளை விட மிக மோசமாக இருக்கும். தொழிலாளர்களும் தங்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு மனதிற்குள் அழுதபடியே இதை சகித்துக் கொள்கின்றனர். இந்தக் கொடுமைகளை பட்டியலிட பல நூல்களை எழுத வேண்டும்.இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறையும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் இவற்றைக் கண்டு கொள்வதே இல்லை.

சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களில் பத்தாயிரத்திற்கும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடத்தில் நிகழ்த்தப்படும் சுரண்டல்கள் குறித்து எந்த அரசும் கவலைப்படுவதில்லை.இதற்கான காரணம் என்ன? என்பது பாமர மக்களுக்கும் தெரியும்.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுவதும், விடுதிகளில் அவர்கள் கண்ணியமாக வாழ்வதும் உறுதி செய்யப்பட வேண்டும். விடுதிகளில் அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுவதையும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்;இவற்றை கண்காணிக்க நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்பு குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.