திமுக விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? – அண்ணாமலை

Annamalai BJP State President

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழக அரசுக்கு இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை இன்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரைத் திறந்து விடாமல் நிறுத்தியிருக்கிறார்கள். காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் சங்கத்தினரையும், தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக, தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவால் உருவாக்கப்பட்டு, நெடுங்காலமாக இருந்து வந்த காவிரிப் பிரச்சினைக்கு, பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால்தான் தீர்வு கிடைத்தது. தற்போதும், தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? உடனடியாக, தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்