எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK STALIN

வெற்றி ஒன்றே இலக்கு என வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுரை.

திருச்சியில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி பயிற்சிப் பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போதும் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.

திருச்சி திமுகவின் கோட்டை மட்டுமல்ல, திமுகவின் தீரர்கள் கோட்டம். “பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்;  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியே கடமை என செயல்பட்டு வருகிறோம். வெற்றி ஒன்றே இலக்கு என வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.

அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்; வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகளை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்குள் குறைகள் இருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாது; எதிரிகள் பரப்பும் அவதூறு கருத்துகளை பொருட்படுத்தாமல், மக்களுக்கு திட்டங்களை கொண்டு செல்லுங்கள்.

நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஆளுநர் நமக்காக பிரசாரம் செய்கிறார் ஆளுநரை மாற்ற வேண்டாம், அவரே தொடரட்டும். யாரிடமும் வம்பு, வாக்குவாதம் வேண்டாம், திசை திருப்பும் முயற்சி நடைபெறுகிறது; பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்தியாவைக் காப்பாற்றப்போவது ‘இந்தியா’ கூட்டணி தான். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஜனநாயகம் புதைக்கப்படும்; இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படத் தொடங்கிவிட்டார்.

வெறுப்பு அரசியலால் தான் மணிப்பூர் பற்றி எரிகிறது; மணிப்பூர் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது ஏன்?  மணிப்பூர் கொடுமைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தாரா? ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு பிரதமர் பேசலாமா? ஊழல் வழக்குகளை காரணம் காட்டி அதிமுகவை அடிபணிய வைத்தது பாஜக.

எதிர்க்கட்சிகளின் வலிமையை பிரதமர் மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்திய பிரதேசத்திலும் அந்தமானில் திமுகவை திட்டும் அளவுக்கு பிரதமர் மாறிவிட்டார். பாஜகவை வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. இந்தியாவின் பிற மாநிலங்களும் மணிப்பூர் மாநிலம் ஆகிவிடாமல் தடுக்க வேண்டும். உரிமைகளை கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இந்த தேர்தலில் கைகோர்த்து வருகிறார்கள்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு கூட இருக்காது. தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ,அமைச்சரோ எதுவும் இருக்காது பாஜக ஆட்சியில் இருந்தால் இந்தியாவின் அரசியலமைப்பு, சமூக நீதியை காப்பாற்ற முடியாது.

வாரிசு கட்சி என கேட்டுக் கேட்டு புளித்துப் போன விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் ஆம், நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம் பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாரிசுகள் நாங்கள். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் தான் நாங்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்