அதிமுக வலியுறுத்தலுக்கு பின்பு தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது – சி.விஜயபாஸ்கர்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சில இடங்களில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ஆம் தேதி 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அதன்படி, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் பேசுகையில், அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த வலியுறுத்தலுக்கு பின்பு தான் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். அதிமுக வலியுறுத்தலுக்கு பின்பு தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.