தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும்..! காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

MKstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தலைகளை வழங்கியுள்ளார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசியது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,  மாநிலம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு வகையான சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுக் கூறி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

அதேபோல், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இதற்காக, காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப்பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோல், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையின், பணித்திறன் பன்மடங்கு மேம்படும். கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.

புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் சில ஊடகங்களில் இது போன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும். இதனைத் தவிர்க்க, காவல் துறையின் மாவட்ட அலுவலர்கள், ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன், குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனையும், ஊடகங்களுக்கு தெரியப்படுத்திவர வேண்டும்.

இதுதவிர, முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களை பத்திரிகைகள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குநர் தெரியப்படுத்துவதும் நல்ல அளிக்கும். பலனை நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், அடிக்கடி குற்றம் நிகழும் இடங்களின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும் அறிவியல்பூர்வமாக காவல் துறை செயல்பட வேண்டும்.

அடுத்து, நான் மிக முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது, பாலியல் ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இத்தகைய குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வரும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தனி அக்கறையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு அவர்களுடைய குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.

போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சென்று குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றியும், அதேபோல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள்பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த அவசரகால உதவி எண்கள் / வாட்ஸ்-அப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டதால் கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளது என்று அறிகிறேன். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மலைப்பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதைபொருட்கள் கடத்தலைத் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் ஆளிநர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் அவர்களின் பணியில் ஈடுபட்டு, சரியான நுண்ணறிவு தகவல்களைப் பெற்று, எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

காவல் துறை சிறப்பாகச் செயல்பட, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்றுத் தருவதிலும் பெரும் கவனம் செலுத்த வேண்டும். இறுதியாக, நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar