மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுய உதவி குழுக்கள்…! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவி குழுக்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேச்சு.
திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் ’வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என பெரியார் கூறி உள்ளார். அதன் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மகளிர் சுய உதவி குழுக்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1989ம் ஆண்டு தொடங்கியா நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 7,22,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகிறது.
நான் யாருக்கு பரிசு அளிப்பதாக இருந்தாலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் வழங்குவேன். எனக்கு பரிசுகள் வழங்குபவர்களிடமும் அந்த பொருட்களை வழங்க வேண்டும் என வேண்டுகோளை வைத்துள்ளேன். திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கும்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவி குழுக்கள் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.