Sanatan Dharma Issue : மலேரியா, டெங்கு போன்றது சனாதானம்.. எதிர்ப்புகளை எதிர்கொள்ள தயார்.! உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!
நேற்று (ஆகஸ்ட் 2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த மாநாட்டின் பெயருக்கு பாராட்டு தெரிவித்தார். தற்போதைய நேரத்தில் சனாதானத்தை எதிர்ப்பதை காட்டிலும் சனாதனத்தை ஒழிப்பதே சிறந்தது என்றும், டெங்கு, மலேரியா, கொரோனா, போன்ற தொற்று நோய்களை எதிர்க்க மக்கள் போராட மாட்டார்கள், அவற்றை ஒழிக்கத்தான் செய்வார்கள். அது போல தான் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது ஒன்று என பேசி இருந்தார்.
மேலும், சனாதானம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும், அதன் அர்த்தம் நிலையானதாகவும் மாற்ற முடியாததாகவும் இருப்பதற்கான அர்த்தமே சனாதனம். ஆனால் நாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம் தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்று தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச்சுக்கு வலதுசாரி அமைப்புகளில் இருந்து பல்வேறு எதிர்ப்பு பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் சட்ட உரிமை கண்காணிப்பக்கம் என்ற பெயரில் ஒரு எதிர்ப்பு விடுக்கப்பட்டது அந்த X சமூகவலைத்தள பதிவில், திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்து பேசியுள்ளார். அதை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக்கூடாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார். திமுக – காங்கிரஸ் கட்சிகளின் மும்பை சந்திப்பில் இந்த கருத்து தான் ஒப்புக் கொள்ளப்பட்டதா? என பதிவிடப்பட்டு இருந்தது.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு நான் ஒருபோதும் அழைத்ததில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும்.
நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன்.
சனாதன தர்மம் மற்றும் சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் விரிவான எழுத்துக்களை எந்த மன்றத்திலும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.
எனது உரையின் முக்கிய அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்: கொசுக்களால் கோவிட்-19, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல, பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புகிறேன்.
நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் நீதிமன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.