புதுச்சேரி ஜிப்மரில் கதிரியக்க இயந்திரத்தை திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்…!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 4 நாட்கள் பயணமாக கடந்த 5 தேதி தமிழகம் வந்தடைந்தார். அன்று நீலகிரி தெப்பகாடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து, தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மாதிரி கிராமத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டுள்ளார்.
அதன் பின், ஆக.6 ஆம் தேதி (நேற்று) சென்னை பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து, சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என்று பெயர் மாற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிலையில், இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர்தர கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். புற்று நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிப்பதற்காக ரூ.17 கோடியில் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுசேரியில் நாளை காலை அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை கடற்கரை சாலை மூடப்படுகிறது. ஜனாதிபதி நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று ஜனாதிபதியின் புதுச்சேரி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.