நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது – சு.வெங்கடேசன் எம்.பி

su.venkadesanmp

இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

கடந்த மே-18-ஆம் தேதி டெல்லியில் புதியதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற கட்டடம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் இவர்களின் நினைவில் இல்லை. நாடாளுமன்றம்  பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்துக்கு என்ன வேலை?

கட்டடத்தின் நடுவில் சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடபுத்தகங்களில் இருந்து ஜனநாயகக் கோட்பாடுகளை நீக்குவதும் நாடாளுமன்றத்தைப் புராணக் காட்சிகளாக மாற்றுவதும் நேரடி இந்துத்துவா நடவடிக்கையாகும்.

அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால்போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளதாக சொல்லப்பட்டு அதற்கு நேர் எதிரான கருத்துகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாவர்க்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு, சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை,  இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்