நாங்கள் விரல்காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் தான் எச்.ராஜா – கே.பி.முனுசாமி
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 2026ல் ஆட்சிக்கு வரவேண்டியதுதான் எங்கள் இலக்கு, இதில் எங்கிருந்து வந்தார்கள் பாஜக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இவர்களை எந்த அளவிற்கு ஏற்றுகொண்டுள்ளனர் என்று தெரிய வரும்.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவோம். நாங்கள் விரல் காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான் எச்.ராஜா, அவருக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழக அரசியலில் நம்பகத்தன்மை இல்லாத ஒருவர் என்றால் அவர் பண்ருட்டியார்தான். அதிமுகவுக்கு தவறான பாதையை காட்டியதால்தான் அவர் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டார். நம்பகத்தன்மை இல்லாதவர் பழனிசாமி என பண்ருட்டியார் கூறிய நிலையில் முனுசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என கே.சி. கருப்பண்ணன் தவறாக சொல்லிவிட்டார். அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறுவது அபத்தமானது என தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எத்தனை பூத்களில் அவர்களுக்கு வாக்களிக்க ஆளிருக்கும்? என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.