இனிமேல் நான் மிகவும் ஆபத்தானவனாக தான் இருப்பேன் – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி..!
நான் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோது நான் ஆபத்தானவனாக இல்லை, ஆனால் இப்போது நான் மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன் என்று இம்ரான் கான் பேச்சு.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் இம்ரான் முதல்முறையாக பெஷாவரில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் நீதித்துறையிடம் கேட்கிறேன், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பாக நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்? 45 ஆண்டுகளாக இந்த தேசம் என்னை அறிந்திருக்கிறது.
நான் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறேனா? நான் கிரிக்கெட் விளையாடியபோது, யாரேனும் என்னை மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றம் சாட்டியதுண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒவ்வொரு முறையும் ஒரு பிரதமர் வெளியேற்றப்பட்டால், மக்கள் அதைக் கொண்டாடுவார்கள், ஆனால் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது, திரளான மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பாகிஸ்தானில் உள்ள பிடிஐ அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகளின் உதவியுடன் வாஷிங்டனில் “வெளிநாட்டு சதி” திட்டமிடப்பட்டது என்று அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். நான் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோது நான் ஆபத்தானவனாக இல்லை, ஆனால் இப்போது நான் மிகவும் ஆபத்தானவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், ஷேபாஸ் ஷெரீப் மீது 40,000 கோடி ரூபாய் ஊழல் வழக்குகள் இருப்பதால், அவரைப் பிரதமராக பாகிஸ்தான் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.