இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – பங்குச்சந்தை தற்காலிகமாக மூடல்..!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பலர் பொருளாதார நெருக்கடியை தாங்க முடியாமல், வெளிநாடுகளுக்கும் தப்பி செல்கின்றனர்.
இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஏப்ரல் 18 முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.