#BREAKING : இலங்கை அரசு டி.வி-யை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்..!
இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர்.
இதனிடையே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால்,இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார் என சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இலங்கையில்,அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,அவசர நிலை பிரகடனம் அமல்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில், இடைக்கால இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என கூறப்படுகிறது.
போராட்டக்காரர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சியை கைப்பற்றியுள்ளனர். இது போராட்டக்காரர்களின் வசம் சென்ற நிலையில் ரூபாவாகினி டிவியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.