’24 மணிநேரம் மட்டுமே’ – பிரதமருக்கு கெடு விதித்த தெலுங்கானா முதல்வர்…!
தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில் அவர், தெலுங்கானா அரசு விவசாயிகளின் உரிமையைக் கோருகிறது என்றும், அரசை கவிழ்க்கும் வல்லமை கொண்ட விவசாயிகளின் உணர்வுகளுடன் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாகவும், அதன் பிறகு நாங்கள் முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.