காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழல்கள் தற்போது நின்று விட்டது..! பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம் சுதர்சன் சேதுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.979 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4 வழி கொண்ட இந்த கேபிள் பாலமானது 27.20 மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற இந்த பாலம் குஜராத்தின் ஓகா முதல் பெய்த் துவாரகா தீவு வரையிலான பகுதிகளை இணைக்கின்றது.

பாலத்தை திறந்த பின்னர் ஓகா துறைமுகத்திற்கு அருகே 30 கி.மீ. தொலைவின் துவாரகா பகுதியில் உள்ள பிரபல துவாரகதீஷ் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார், மேலும் துவாரகாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைத்தார். முன்னதாக நீருக்கடியில், ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரார்த்தனை செய்தார். இதன்பின்னர் பொது மக்கள் முன் அவர் உரையாற்றினார். அவர் பேசும் போது, “நான் குஜராத் முதல்வராக இருந்த போது, ​​உள்ளூர்வாசிகள் என்னிடம் பாலம் பற்றி பேசுவார்கள், இதை அப்போதைய காங்கிரஸ் அரசிடம் கோரிக்கையாக வைத்தும் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று நான் உத்தரவாதம் அளித்தபோது, ​​என்னை அவதூறாகப் பேசி எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன. இன்று அனைவரும் தங்கள் கண் முன்னே புதிய இந்தியா உருவாவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலம் நாட்டை ஆண்டவர்களுக்கு மன உறுதி இல்லை, காங்கிரஸின் அனைத்து அதிகாரமும் ஒரே குடும்பத்தை வளமாக்க பயன்படுத்தப்பட்டது. நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி நினைவிருக்கும்? அவர்களின் அதிகாரம் அனைத்தும் 5 ஆண்டுகள் ஆட்சியை எப்படி நிலைநிறுத்துவது, ஊழல்களை எப்படி மறைப்பது என்று யோசிப்பதில் தான் பயன்படுத்தப்பட்டது.

Read More – போக்குவரத்து போலீசாரிடம் ரூ. 49,000 அபராதம் செலுத்திவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வாகன உரிமையாளர்

2014ல் நீங்கள் என்னை டெல்லிக்கு அனுப்பியபோது, ​​இனி நாட்டைக் கொள்ளையடிக்க விடமாட்டேன் என்று வாக்குறுதி அளித்தேன். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழல்கள் தற்போது நின்று விட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவை உலகின் 5வது பெரிய பொருளாதாரம் உள்ள நாடாக மாற்றினோம். இதன் விளைவாக, புதிய பிரம்மாண்டமான கட்டுமானங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. நமது புனிதத் தலங்கள் நவீன வடிவில் உருவாகி வருகின்றன” என்றார்.

 

Leave a Comment