ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.!

வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

அதேபோல குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

கனமழை… 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! 

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்து இருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்திற்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதன் மூலமாக அதிகனமழை பெய்யும் வாய்ப்பு நிலவி உள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தற்போது அதிகமாக இருப்பதன் காரணமாக  அங்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு சேவை இயங்கி வருகிறது. மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறையும் அங்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும், நிலக்கல் முதல் பம்பை வரையிலான பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பத்தினம்திட்டா  மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்தது போல இடுக்கி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் காரணமாக சபரிமலை ஐயப்ப சாமி பக்தர்கள் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.