11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் கால் பதித்து விளையாடி வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடியது.

இதன்பிறகு, இருநாட்டு விவகாரம், தாக்குதல், அரசியல் பிரச்சனை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து தற்போதுதான் இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று லீக் போட்டிகளில் பல்வேறு நகரங்களில் விளையாடி வருகிறது. இதுவரை 4 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐதராபாத், அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

கடைசியாக நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. இந்த நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சென்னை வந்துள்ளனர். இதற்கு முன்னதாக, 2012ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

எனவே, வரும் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியும், 26ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இதற்காக தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் விரைவில் பயிற்சி மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்